ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் வடக்கு ஜப்பானில் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுனாமி அலை 30 சென்றிமீட்டர் உயரம் கொண்டதாக காணப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளில் ஒசாகாவிலிருந்து நகரின் தெற்கே உள்ள வகயாமா வரை 3 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எதிர்பார்க்கப்படுவதாக ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் முன்னதாக கூறியது.
இந்த சுனாமி அலைகள் காரணமாக இதுவரை எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என ஜப்பானின் தீயணைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹொக்கைடோ முதல் ஒகினாவா வரையிலான ஜப்பானிய கடற்கரையில் உள்ள 133 நகர சபைகளிலிருந்து 900,000 இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த நிலைமை காரணமாக இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
UPDATE: ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஹவாய் மற்றும் அலஸ்கா மாநிலங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹவாய் தீவு முழுவதும் சுனாமி தாக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் கடலோரப் பகுதிகளைத் தவிர்த்து, உயரமான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும், சீனா, பெரு மற்றும் ஈக்குவடோர் ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலும், அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் மற்றும் மைக்ரோனேசியாவின் சில தீவுகளிலும் சுனாமி தாக்கம் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், உலகை இதுவரை தாக்கிய 6ஆவது வலிமையான நிலநடுக்கமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
ரஷ்யாவின் தொலைதூர கிழக்கு கடல் பகுதியில் உள்ள கம்சாட்கா தீபகற்பத்தை அருகிலுள்ள பெருங்கடலில் இன்று (30) சக்திவாய்ந்த 8.8 ரிச்டர் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக ரஷ்யா, ஹவாய் தீவுகள், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, பசிபிக் கடலுக்கு அண்மித்த பல நாடுகளில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு மக்கள் இடம்பெயரச் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டின் துறைமுகநகரான Severo Kurilsk நகரில் சுமார் 3-4 மீற்றர் (10-13 அடி) உயரத்தில் சுனாமி எழுந்து அந்நகரை வெள்ளக்காடாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலர் காயம்; மக்கள் இடமாற்றம்
ரஷ்யாவின் தொலைதூர பகுதியான இங்கு பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2011ஆம் ஆண்டு பேரழிவான நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் தாக்கமடைந்த ஜப்பானின் கிழக்குக் கடற்கரையின் பெரும்பாலான பகுதிகளில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன.
“இது கடந்த பல தசாப்தங்களில் இருந்தது போல் அல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம்” என கம்சாட்கா மாகாண ஆளுநர் விளாடிமிர் சோலடோவ் Telegram-இல் வெளியிட்ட காணொளியில் தெரிவித்துள்ளார்.
சுனாமி
கம்சாட்காவின் பல பகுதிகளில் 3–4 மீற்றர் (10–13 அடி) உயரம் கொண்ட சுனாமி அலைகள் எழுந்ததாக ரஷ்யாவின் அவசரநிலை நடவடிக்கைகளுக்கான மாகாண அமைச்சர் செர்கெய் லெபெடெவ் தெரிவித்துள்ளார். மக்கள் கடற்கரை பகுதிகளை விட்டு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமெரிக்க புவியியல் கண்காணிப்பு மையமான USGS வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலநடுக்கம் 19.3 கி.மீ. (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அது பெட்ரோபாவ்லொவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரிலிருந்து கிழக்கே 119 கி.மீ. (74 மைல்) தொலைவில் மையம்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
குறித்த நகரத்தில் சுமார் 165,000 பேர் வசிக்கின்றனர். ஆரம்பத்தில் 8.0 என்ற அளவாக அறிவிக்கப்பட்ட நிலநடுக்கம், பின்னர் 8.8 என தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்துக்கு பின்னர் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த மற்றுமொரு அதிர்ச்சி பதிவாகியுள்ளது.
ஜப்பான் எச்சரிக்கை; இடம்பெயர உத்தரவு
ஜப்பான் வானிலை நிறுவனம் தங்களது எச்சரிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. 3 மீற்றர் (10 அடி) உயரம் கொண்ட சுனாமி அலைகள் நாட்டின் பல கடற்கரை பகுதிகளுக்கு 0100 GMTக்கு பின்னர் அடையக்கூடும் என அது அறிவித்துள்ளது.
சில பகுதிகளில் மக்களை வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக NHK செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.