News

ஜெனிவா மீளாய்வுகளால் இலங்கைக்கு பாதிப்பில்லை ; அரசாங்கம் நம்பிக்கை

 

இஸ்ரேல் – ஈரான் மோதல் மூன்றாம் உலக போராக மாறினால் ஐக்கிய நாடுகள் சபையின் இருப்புக்கே பாதிப்பாகி விடுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை விஜயத்தின் போது குறிப்பிட்டிருந்த நிலையில், செப்டெம்பர் மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நாட்டிற்கு பாதிப்பாக அமையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜுன் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் பல்வேறு சந்திப்புகளையும் விஜயங்களையும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கையில் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அரசாங்க தரப்பினருடனான சந்திப்புகளின் போது இஸ்ரேல் – ஈரான் மோதல் உட்பட இலங்கையின் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடி இருந்தார்.

இது குறித்து அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிடுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள பன்னாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

பிரித்தானியா மற்றும் கனடா உள்ளிட்ட சில நாடுகள் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்க உள்ளது. இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு விஜயம் செய்து நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்து சென்றுள்ளார்.

அவர் வழங்கிய உத்தரவாத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாகவே அமையும்.

ஏனெனில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகளின் இலங்கை விஜயங்களின் போது இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களை போன்று அல்லாது தற்போதைய அரசாங்கம் செயற்பட்டிருந்தது.

எமது விஜயத்தின் நோக்கங்களை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் செயற்கையாக எதனையும் செய்ய வில்லை என்பது உயர்ஸ்தானிகரின் நிலைப்பாடாக இருந்தது.

அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகளில் மாத்திரமே ஒழுங்கிணைப்பு ரீதியாக அரசாங்கம் பங்களிப்பு செய்தது. ஏனைய சந்திப்புகள் மற்றும் விஜயங்களில் அரசாங்கம் தலையிட்டிருக்க வில்லை. எனவே இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நேர்மையாக செயல்பட்டது என்பதை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் கூறிச் சென்றுள்ளார்.

மேலும் இலங்கை வந்த முதல் நாளில் இடம்பெற்ற அரசாங்க உயர் மட்டத்தினருடனான சந்திப்பின் போது, இஸ்ரேல் – ஈரான் மோதல் மூன்றாம் உலக போராக மாறினால் ஐக்கிய நாடுகள் சபையின் இருப்புக்கே பாதிப்பாகி விடும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top