ஜேர்மனியில், தனது நோயாளிகளைக் கொன்று அவர்கள் வீடுகளுக்கு தீவைத்த மருத்துவர் ஒருவர் தொடர்பில் வழக்கு விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
பெர்லினில் மருத்துவராகப் பணியாற்றிவந்த Johannes M (40) என்பவருடைய நோயாளிகளின் வீடுகள் பல தீப்பிடித்ததை அவரது சக மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
கடந்த ஆகத்து மாதம் பொலிசார் Johannesஐ கைது செய்தார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, அவர் 12 பெண்கள் மற்றும் மூன்று ஆண்களை ஊசி போட்டுக் கொன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது நோயாளிகளுக்கு மயக்க மருந்து முதலான சில மருந்துகளை அளவுக்கு அதிகமாக ஊசி மூலம் ஏற்றிக் கொன்றுவிட்டு, அவர்கள் வீடுகளுக்கு தீவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார் Johannes.
உண்மையில், தனது மாமியார் உட்பட, நூற்றுக்கும் அதிகமானோரை அவர் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அந்த வழக்குகள் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
எதற்காக அவர் அப்படி தனது நோயாளிகளைக் கொன்றார் என்பது தெரியவில்லை.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.