போரை நிறுத்துமாறு, அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், உக்ரைன் சிறைச்சாலை மற்றும் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.இந்த சூழலில், ‘உக்ரைன் போர் அமைதி ஒப்பந்தத்தில், கையெழுத்திட புடினுக்கு இன்னும் 10 முதல் 12 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். அதை பொருட்படுத்தாத ரஷ்யா, உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
உக்ரைனின் சப்போரியா மாகாணம் பிலன்கிஸ்கா நகரில் உள்ள சிறைச்சாலை மற்றும் மருத்துவமனை மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. ட்ரோன்கள் மூலம் சிறைச்சாலை மற்றும் மருத்துவமனை மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் சிறைக்கைதிகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். மேலும், 80 பேர் படுகாயமடைந்தனர்.
மத்திய உக்ரைனின் டினிப்ரோ பகுதியில், ரஷ்ய படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் மூன்று மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமாகின. இவை வேண்டுமென்றே, நடத்தப்பட்ட தாக்குதல்கள்; தற்செயலானவை அல்ல என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.