News

தமிழர்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 42 வருடங்கள்!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம், வன்முறை மற்றும் படுகொலைகள் நடத்தப்பட்டு இன்றுடன் 42 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.

அரசியல்வாதிகள் பலரின் தூண்டுதலோடு பெரும்பான்மையின மக்கள், தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இந்த கறுப்பு ஜூலை கலவரமானது இன்னமும், தமிழ் மக்கள் மனதில் ஆறா வடுக்களாக இருக்கின்றது.

1983 ஜூலையில், தமிழர்களின் வாழ்க்கையை புரட்டி போட்ட, பெரும்பான்மையித்தின் இந்த கொடூர செயல், தமிழர்கள் மத்தியில் பெரும் சலனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கை அரசாங்கத்தின் மீது இலங்கை தமிழர்கள் மாத்திரமன்றி, உலக வாழ் தமிழர்களும் ஏன் சிங்களவர்களும் கூட நம்பிக்கை இழந்தார்கள்.

தமிழர்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 42 வருடங்கள்! | Black July Remembrance Day 42 Years

மக்களின் வீடுகள், உடைமைகள் என அனைத்தும் எரிக்கப்பட்டு சுக்கு நூறாக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கை சிதைக்கப்பட்டது.

1983 ஜூலை 23 அன்று, தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னணியே இப்படுகொலைகளுக்குத் தூண்டுதலாக இருந்தது எனக் கூறப்பட்டது.

இருப்பினும், அப்போது ஆளும் தரப்பாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சிறில் மெத்தியூ மற்றும் கட்சி உறுப்பினர்களால் திட்டமிடப்பட்டு, விரைவில் சிங்களப் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழருக்கு எதிரான வன்முறைகளாக இது முன்னெடுக்கப்பட்டது.

1983 ஜூலை 24ஆம் திகதி இரவு, கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான இந்த கொடூர கலவரம் தொடங்கியது, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது.

தமிழர்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 42 வருடங்கள்! | Black July Remembrance Day 42 Years

ஏழு நாட்கள் தொடர்ந்த இந்த கலவரத்தில், முக்கியமாக சிங்களக் கும்பல்கள் தமிழரைத் தாக்கினர், உயிருடன் எரித்தனர், படுகொலைகளைப் புரிந்தனர், உடமைகளைக் கொள்ளையடித்தனர்.

இந்த தாக்குதல்களில் இறப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டது. 150,000 பேர் வீடற்றவர்களாயினர்.

ஏறத்தாழ 8,000 வீடுகளும், 5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு 300 டொலர் மில்லியன் என மதிப்பிடப்பட்டது.

பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் என்ற அரச-சார்பற்ற அமைப்பு 1983 டிசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் இந்த கலவரத்தை ஒரு இனப்படுகொலை என்று சுட்டிக்காட்டியிருந்தது.

பெரும்பான்மையினமான சிங்கள தரப்பினர், தமிழன் என்றாலே கொன்று விடுவார்கள் என்பது போல் 1983 ஜூலை நாட்கள் கடந்திருந்தன.

அத்தனை இழப்புக்களையும் தாண்டி இன்றும் அழியா பெரும் சோகங்களுடன் இலங்கை தமிழர்கள் இந்த 42ஆவது ஆண்டினை நினைவுகூருகின்றனர் என்பது வேதனைக்குரிய விடயம்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top