துருக்கியில் காட்டுத்தீயை முன்னிட்டு, 1,700 பேர் பாதுகாப்பான இடம் தேடி புலம்பெயர்ந்து உள்ளனர்.
துருக்கியில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் வடமேற்கே அமைந்த 4-வது மிக பெரிய நகரான புர்சா நகரில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால், தலைநகர் அங்காராவுடனான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
தீயை அணைக்க 1,900-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சென்றுள்ளனர். இதுபற்றி வனத்துறை மந்திரி இப்ராகிம் யுமாக்லி கூறும்போது, நேற்று 84 இடங்களில் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். கராபுக் உள்பட துருக்கியின் வடமேற்கு பகுதியானது மிகுந்த அச்சுறுத்தலுக்கு இலக்காகி உள்ளது என கூறியுள்ளார்.
துருக்கியில், இதுவரை இல்லாத வகையில் 122.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது என அந்நாட்டு வானிலை இயக்குநரகம் தெரிவித்து உள்ளது. இந்த தீயை அணைக்கும் பணியில் தீயை அணைப்பு வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். காட்டுத்தீக்கு இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தீயில் கருகி விட்டன. 1,700 பேர் பாதுகாப்பான இடம் தேடி புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.