பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று(20) அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் இடம்பெற்றுள்ளது.
சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் கல்முனை மாநகர அம்மன் கோயில் வீதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது “இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்”, “காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதாவது நீதி வழங்கு”, “அனைத்து தேசிய இனத்தவர்களுக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்புக்காகப் போராடுவோம்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கையெழுத்திடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக இந்த கையெழுத்துப் போராட்டத்தில் அனைத்து இன மக்களும் அதிகளவில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் கையெழுத்து இட்டுள்ளார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்த ஏற்பாட்டாளர்கள்,
“யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கும், அரசியல் படுகொலைகளுக்கு உள்ளானவர்களுக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை.
அரசியல் கைதிகள், அரச படையினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் மற்றும் யுத்தத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடு தொடர்பான பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.
இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருதல், பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற அடக்குமுறை சட்டங்களை ரத்து செய்தல் மற்றும் தேசிய பிரச்சனைக்கு அரசியல் தீர்வை வழங்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு இந்த பிரச்சனைகளை தீர்ப்பதாக தற்போதைய அரசாங்கம் தேர்தல் மேடையில் உறுதி அளித்தது ஆனால் அந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அந்த அடக்குமுறை சட்டத்தை பயன்படுத்துகிறார்கள்.
இதற்கிடையில் வடக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளில் சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகள்கூட கண்டுபிடிக்கப்படுகின்றன.இவர்கள் அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.