News

பாகிஸ்தானில் மழை, வெள்ளம் 72 பேர் மரணம், 130 பேர் காயம்

 

பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் பலத்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 72 பேர் உயிரிழந்துள்ளதோடு 130 பேர் காயமடைந்துள்ளனர் என்று தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.

கைபர் பக்துன்க்வா, பஞ்ஜாப், சிந்த், பலுசிஸ்தான், அசாத் காஷ்மீர் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த மரணங்களும் காயங்களும் பதிவாகியுள்ளன என்றும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாதத்தின் இறுதிப் பகுதி முதல் பாகிஸ்தான் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சியைப் பெற்று வருகின்றது. இம்மழைவீழ்ச்சி அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்க முடியுமென அனர்த்த முகாமைத்துவ அதிகார சபையின் தேசிய அவசரகால செயல்பாட்டு மத்திய நிலையம் கூறியுள்ளது.

இது தொடர்பில் அதிகார சபைவிடுத்துள்ள அறிக்கையில், இந்த பலத்த மழை மற்றும் வௌ்ள நிலை காரணமாக கைபர் பக்துன்வாவில் சுமார் 28 பேரும் பஞ்சாபில் 22 பேரும், சிந்துவில் 15 பேரும், பலுசிஸ்தானில் 07 பேரும் மற்றும் ஆசாத் காஷ்மீரில் 04 பேரும் என்றபடி உயிரிழந்துள்ளனர். தற்போது நிலவிவரும் பலத்த மழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் அடிக்கடி வௌ்ளம் ஏற்படுகின்றது. அத்தோடு வீடு இடிந்து விழுதல், மின்னல் தாக்கம், நீரில் மூழ்குதல் போன்ற அனர்த்தங்களும் இடம்பெறுகின்றன. இந்த சீரற்ற மழைவீழச்சியினால் சுமார் 161 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 100 கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

அவசரகால மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுவருவதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top