மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான விசா பெறுவதற்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது.
எச்-1பி விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிக்கிறது. அதேபோல, படிக்க வரும் மாணவர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் தனித்தனி விசாக்கள் உண்டு.
இதனிடையே, கடந்த ஜூலை 4ம் தேதி ‘ஒரு மிகப்பெரிய அழகிய மசோதா’ என்ற மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டு, அதனை சட்டமாக்கினார். அதன்படி, தொழில்முனைவோர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான விசா பெறுவதற்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். பணவீக்கத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்தக் கட்டணம் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து குடியுரிமை இல்லாத விசா விண்ணப்பங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளோமேடிக் விசாக்கள் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சுற்றுலா மற்றும் பணிபுரிவதற்காக செல்பவர்களுக்கன பி-1, பி-2 விசாவுக்கு ரூ.15,855 கட்டணமாகும். அதோடு, ஒருங்கிணைந்த கட்டணம் ரூ.21,000, உள்பட பிற கட்டணங்களுடன் சேர்த்து ரூ.40,456 செலுத்த வேண்டும். இது வழக்கமான விலையை விட கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு அதிகம்.
இதில், வைப்புத் தொகையை திரும்பப் பெற, விசா காலக்கெடுவுக்கு 5 நாட்களுக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசின் இந்த புதிய நடைமுறையினால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு நிதிச்சுமை அதிகரிக்கிறது. எனவே, அமெரிக்காவுக்கு சுற்றுலா மற்றும் கல்வி பயில்வோர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
அதேவேளையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணியருக்கு, விசா வழங்குவதில் சீன அரசு சலுகைகளை அறிவித்தது. அதன்படி, 30 நாட்களுக்கு விசா இல்லாமல் சீனாவில் சுற்றிப் பார்க்கலாம். சீன அரசு அறிவித்துள்ள 75 நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம்பெறவில்லை.