News

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : உயிரிழப்புக்கான காரணம் கண்டறிவு

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத்தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெடிப்புக் காயங்களால் உயிரிழந்துள்ளமையும், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளமையும் பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி அடையாளம் காணப்பட்டது.

குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பிரதான வீதியோரத்தில் இந்த மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி கே.வாசுதேவா மற்றும் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் 52 மனித என்புத்தொகுதிகள் அங்கிருந்து மீட்கப்பட்டன.

அத்துடன் ஆடைகள், துப்பாக்கி ரவைகள் உட்பட வேறு தடயப்பொருள்களும் மீட்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புத் தொகுதிகளின் பகுப்பாய்வு அறிக்கையில் இறந்தவர்கள் ஏன் இறந்தார்கள்? என்ன காரணத்தால் இறந்தார்கள்? அவர்களின் வயது எத்தனை? போன்ற விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட என்புத் தொகுதிகளில் 31 பெண்களுடையவை என்றும், 21 ஆண்களுடையவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் வயது எல்லை 12 முதல் 53 வயது வரை உள்ளது. அதேநேரம் பெரும்பாலானவர்கள் 13 முதல் 30 வயதுடையவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 32 பேரின் உயிரிழப்புக்கு வெடிப்புச் சம்பவம் அல்லது வெடிப்புக் காயம் காரணமாகவுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக் காயத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்புச் சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பாலான உயிரிழப்புகள் வெடிப்புக் காயங்களால் ஏற்பட்டுள்ளன என்பது பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top