ஜப்பான் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து, ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
இதுபற்றி அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட செய்தியில், 19.3 கி.மீ. ஆழத்தில், 1.65 லட்சம் பேர் வசிக்க கூடிய அவச்சா என்ற கடலோர நகரத்தில், கம்சாத்ஸ்கை நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 125 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
எனினும், பின்னர் அது 8.0 என திருத்தி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கம்சத்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் பதிவாகின. இதனால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
அடுத்த 3 மணிநேரத்தில் தீவிர சுனாமி அலைகள் எழும்ப கூடும் என அமெரிக்காவும் எச்சரித்து உள்ளது. இதனால், பிலிப்பைன்ஸ், பலாவ், மார்ஷல் தீவுகள், சூக், கொஸ்ரே பகுதிகளில் ஒன்று முதல் 3.3 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்ப கூடும்.
தென்கொரியா, வடகொரியா மற்றும் தைவானில் ஓரடிக்கு மேல் உயரத்த்தில் அலைகள் எழும்பும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பான் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
இந்நிலையில், சுனாமி அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பியுள்ளன. ரஷியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்க தாக்கங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிலநடுக்கம் பற்றிய வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. அதில், வீட்டின் உள்ளே இருந்த நாற்காலி, மேஜை போன்ற பொருட்கள் கிடுகிடுவென ஆடும் காட்சிகள் காணப்படுகின்றன. மேஜை மீது இருந்த பாட்டில், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களும், வாளியில் இருந்த தண்ணீரும் குலுங்கும் காட்சிகளும் உள்ளன.
2011-ம் ஆண்டு ஜப்பானில் துஹோகு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு ஏற்பட்ட மிக பெரிய நிலநடுக்கம் இதுவாகும். இதேபோன்று, அலாஸ்காவில் உள்ள அலூடியான் தீவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் மேற்கு கடலோரம் மற்றும் ஹவாய் பகுதியிலும் சுனாமி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஜப்பானின் பசிபிக் கடலோரம் காலை 10 மணி முதல் 11.30 மணிக்குள் சுனாமி அலைகள் தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜப்பானிய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. பல தசாப்தங்களில் இல்லாத வகையில், மிக கடுமையான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது என கம்சத்கா கவர்னர் விளாடிமிர் சோலோடோவ் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்து உள்ளார்.