ரஷ்யாவுடன் வர்த்தக உறவுகளைக் கொண்டிருக்கும் சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளும் உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர மொஸ்கோவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே வலியுறுத்தியுள்ளார்.
இம்மூன்று நாடுகளது தலைவர்களும் புட்டினுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று அவரை வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் இந்நாடுகளுக்கு பெரிய அளவில் பாதிப்புக்கள் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்துவரும் 50 நாட்களுக்குள் உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யாவுக்கு எதிராக மிகக் கடுமையான வரிகளை விதிப்பேன் என்றும்’ ரஷ்ய ஏற்றுமதிகளை வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் இரண்டாம் நிலை வரிகளை விதிப்பேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்தப் பின்புலத்திலேயே நேட்டோ பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தீவிரமாக எடுக்க ரஷ்யா மறுக்கிறது. நீங்கள் சீனாவின் ஜனாதிபதியாகவோ, இந்தியப் பிரதமராகவோ அல்லது பிரேசிலின் ஜனாதிபதியாகவோ இருந்து, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால்100 சதவீத பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ரொய்ட்டர்