அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அமெரிக்கா நிலைநிறுத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 1987ல் சோவியத் யூனியன் காலத்தில் போடப்பட்ட அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போர், மூன்றாவது ஆண்டை நெருங்கியுள்ளது. இதில், உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
பொருளாதார தடை இதற்கிடையே, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டார். ஆனால், இதற்கான நிபந்தனைகளை ஏற்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மறுத்தார்.
இதையடுத்து, ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடை விதிப்பதாக டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பதாகவும் டிரம்ப் எச்சரித்தார்.
இதற்கிடையே, ரஷ்யாவை மிரட்டும் வகையில், அதன் கடல் பகுதிக்கு, இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா வுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக, ரஷ்யா நேற்று அறிவித்தது.
கடந்த, 1987ல் அமெரிக்கா மற்றும் அப்போதைய சோவியத் யூனியன் இடையே ஐ.என்.எப்., எனப்படும் நடுத்தர தொலைவு அணுஆயுத ஏவுகணை பயன்பாடு தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது.
அச்சுறுத்தல் இந்த ஒப்பந்தம், 1987ல் சோவியத் யூனியனின் அப்போதைய தலைவர் மிகைல் கோர்பச்சேவ் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் ஆகியோரால் கையெழுத்தானது.
கடந்த, 2019ல் டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்தில், ரஷ்யாவின் விதிமீறல்களை காரணம் காட்டி, அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியது.
ஆனால், அமெரிக்கா அத்தகைய ஏவுகணை தாக்குதல் நடத்தாத வரை, நாங்களும் ஏவுகணைகளை நிலைநிறுத்த மாட்டோம் என ரஷ்யா தனக்குத்தானே தடை விதித்துக்கொண்டது.
இந்த நிலையில், அமெரிக்கா தற்போது தங்களுக்கு எதிராக அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் களை அனுப்பி இருப்பதால், தங்கள் முடிவை திரும்பப்பெறுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் நீடிக்கும் போர் அச்சுறுத்தல், ஒப்பந்தத்தை மீறி ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கு வழிவகுத்துள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.