அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற டிரம்ப், சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதில் தீவிரமாக இருக்கிறார். சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்தல், நாடு கடத்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாணவர் விசாவில் அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் மீதும் கெடுபிடிகள் காட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்காலிக பயணமாக அமெரிக்கா செல்பவர்கள் 15 ஆயிரம் டாலர் டெபாசிட் செலுத்தினால்தான் விசா வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை சோதனை முறையில் டிரம்ப் அரசு அமல்படுத்தப்பட உள்ளது. கடந்த 2023-ம் நிதியாண்டுக்கான அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிக்கையில், அந்த ஆண்டில் 5 லட்சத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் விசா காலத்தை தாண்டி, அமெரிக்காவில் தங்கி இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
எனவே, விசா காலத்தை கடந்து எந்த வெளிநாட்டினரும் தங்கக்கூடாது என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
“அமெரிக்கா வருபவர்களுக்காக 12 மாத கால விசா பிணைப்பத்திர சோதனை திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்கீழ், சுற்றுலா, வர்த்தகம் ஆகிய காரணங்களுக்காக அமெரிக்கா வர பி-1. பி-2 விசாக்கள் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர், 15 ஆயிரம் டாலர்வரை (ரூ.13 லட்சம்) மதிப்புள்ள பிணைப்பத்திரத்தை டெபாசிட்டாக செலுத்த வேண்டும்.
விசா காலத்தை கடந்து தங்கி இருக்கும் வெளிநாட்டினரால் ஏற்படும் தேச பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கும் டிரம்ப் அரசின் வெளிநாட்டு கொள்கையின் முக்கிய தூணாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது.
எந்தெந்த நாட்டினர் விசா காலத்தை கடந்து அதிகமாக தங்கி இருக்கிறார்களோ, அவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும். வசிப்பிட தேவையின்றி குடியுரிமை பெற்றவர்கள், போதிய சரிபார்ப்பு தகவல்கள் இல்லாதவர்கள் ஆகியோருக்கும் இது பொருந்தும்.
அமெரிக்க தூதரக அதிகாரிகள், மேற்கண்ட நபர்களுக்கு விசா வழங்க நிபந்தனையாக, 15 ஆயிரம் டாலர்வரை மதிப்புள்ள பிணைப்பத்திரம் செலுத்துமாறு கேட்கலாம்.
இத்திட்டம், இம்மாதம் அமலுக்கு வருகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதிவரை அமலில் இருக்கும். எந்தெந்த நாட்டினர் டெபாசிட் செலுத்த வேண்டும் என்பது திட்டம் அமலுக்கு வருவதற்கு 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும். தேவைக்கேற்ப இந்த பட்டியலில் மாறுதல் செய்யப்படும். எந்தெந்த நாடுகளுக்கு பொருந்தும் என்பதை அறிவிக்கும்போதே அதற்கான சிறிய விளக்கமும் அளிக்கப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக, தற்காலிகமாக வருபவர்கள், விசா காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவை விட்டு செல்லாதது தெரிய வந்துள்ளது. வெளிநாட்டு அரசுகள் தங்கள் குடிமக்கள் அமெரிக்காவில் இருந்து விசா முடிவதற்குள் திரும்புவதற்கு நடவடிக்கை எடுப்பதை இத்திட்டம் ஊக்குவிக்கும்.”