ஆப்பிரிக்காவின் 2-வது பெரிய நாடு காங்கோ ஜனநாயக குடியரசு. இங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. உகாண்டாவை மையமாக கொண்டு செயல்படும் இந்த குழுவினர் எல்லையோர கிராமங்களில் நுழைந்து பொதுமக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.
அதன் ஒருபகுதியாக எம்-23 கிளர்ச்சி குழுவினர் கோமா உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். எனவே இந்த கிளர்ச்சி குழுக்கள் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
இந்தநிலையில் கிவு மாகாணம் பாப்பரே கிராமத்துக்குள் கிளர்ச்சி குழுவினர் நுழைந்தனர். அப்போது கண்ணில் படுகிறவர்களையெல்லாம் அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டது.
இதனால் வீடுகளுக்குள் ஓடிச் சென்று பலர் தப்ப முயன்றனர். ஆனால் அவர்களது வீடுகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதில் 52 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
மேலும் 100 பேரை பணய கைதிகளாக அந்த கும்பல் கடத்திச் சென்றது. எனவே அவர்களை மீட்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனையடுத்து உகாண்டா எல்லையில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசாங்கம் அவர்களை அறிவுறுத்தி உள்ளது.