உக்ரைன்(ukraine) நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி இன்று சனிக்கிழமை மேற்கு நகரமான லிவிவ்வில் சுட்டுக் கொல்லப்பட்டார்,
இதனையடுத்து கொலையாளியைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய ஒருவர் பருபி மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் அரச சட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தாக்குதல் நடத்தியவர் தப்பி ஓடிவிட்டார் என்றும் அந்த அலுவலகம் அறிவித்துள்ளது.
54 வயதான பருபி, நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வந்தார். 2016 ஏப்ரல் முதல் ஓகஸ்ட் 2019 வரை நாடாளுமன்ற சபாநாயகராக பதவி வகித்தார். அத்துடன் 2013-14 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளுக்கு அழைப்பு விடுத்த போராட்டங்களின் தலைவர்களில் ஒருவராக அவர் செயற்பட்டார்.
2014 ஓகஸ்ட் வரை உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பேரவையின்; செயலாளராகவும் இருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் கிழக்கு உக்ரைனில் சண்டையை ஆரம்பித்த ரஷ்யா, கிரிமியா தீபகற்பத்தை தமது நாட்டுடன் இணைத்தது. இந்தநிலையில், இந்தக் கொலைக்கும் உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பதை உக்ரைன் அதிகாரிகள் உடனடியாகக் குறிப்பிடவில்லை.
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னரே உக்ரைனின் கடற்படை கப்பலை ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்கி மூழ்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.