கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கடந்த 1994-ம் ஆண்டு நிகழ்ந்த இனப்படுகொலைக்குப் பிறகு, ருவாண்டாவில் இருந்து சுமார் 20 லட்சம் ஹூட்டு இன மக்கள் காங்கோவிற்கு தப்பி ஓடினர். அந்த இனப்படுகொலையில் சுமார் டுட்சி, ஹூட்டு ஆகிய இனங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட சுமார் 8,00,000 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த இனப்படுகொலைக்கு ஹூட்டு இனத்தினரே காரணம் என்றும், காங்கோ ராணுவம் அவர்களை பாதுகாத்ததாகவும் ருவாண்டா அதிகாரிகள் குற்றம்சாட்டினர். இந்த இனப்படுகொலையை தொடர்ந்து, கிழக்கு காங்கோவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 100-க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதில் எம்-23 உள்ளிட்ட குழுவினர் ருவாண்டா அரசின் உதவியோடு இயங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த நிலையில், கடந்த ஜுலை மாதம் கிழக்கு காங்கோவில் உள்ள கிவு மாகாணத்தில் ஹூட்டு இன மக்களை குறித்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 140 பேர் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. மேலும் ருவாண்டா ராணுவத்தினரின் உதவியோடு எம்-23 ஆயுதக்குழுவினர் இந்த தாக்குதல்களை நிகழ்த்தியதாக, அங்குள்ள உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். அதே சமயம், இந்த குற்றச்சாட்டுகளை எம்-23 ஆயுதக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.