News

காசாவில் பட்டினி உயிரிழப்பு 159 ஆக உயர்வு – தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் மேலும் 111 பலஸ்தீனர்கள் பலி

காசாவில் இஸ்ரேலின் கடும் தாக்குதல்கள் தொடரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 111 பேர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வருதற்கு இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றபோதும் இஸ்ரேல் தனது போர் நடவடிக்கையை அதே தீவிரத்துடன் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இன்று கொல்லப்பட்டவர்களில் ஐவர் தெற்கு காசாவில் கான் யூனிஸ் நகரில் கூடாரத்தில் அடைக்கலம் பெற்றிருந்த நிலையிலேயே இஸ்ரேலின் தாக்குதல்களில் பலியாகி உள்ளனர். மத்திய காசாவில் உதவி விநியோக மையத்தில் உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட புதிய தாக்குதலில் 60 பேர் வரை காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

காசாவில் தொடரும் போர் சர்வதேச அளவில் விமர்சனத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்கும் நாடுகள் பட்டியலில் கனடாவும் இணைந்துள்ளது. எதிர்வரும் செப்டெபரில் ஐ.நாவில் இதனை அறிவிக்க கனடா திட்டமிட்டுள்ளது.

காசாவில் பட்டினி மரணம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு விரைவாக உதவிகளை அதிகரிப்பதற்கு ஐ.நா அறிக்கையாளர் அலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் கடந்த மார்ச் ஆரம்பம் தொடக்கம் முடக்கிய நிலையில் சர்வதேச அழுத்தங்களை தொடர்ந்து கடந்த வாரம் அதில் தளர்வை கொண்டுவந்தது.

எனினும் காசா பகுதியில் பஞ்ச வரம்பை எட்டி இருப்பதாக ஐ.நாவுடன் தொடர்புபட்ட பட்டிய கண்காணிப்பு நிறுவகம் எச்சரித்திருக்கும் நிலையில் அங்கு செல்லும் உதவிகள் போதுமானதாக இல்லை என்று ஐ.நா. மற்றும் தொண்டு அமைப்புகள் கூறி வருகின்றன

காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக நேற்று மேலும் இரு குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் 21 மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் காசா போரில் பட்டினியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்திருப்பதோடு இவர்களில் 90 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இந்நிலையில் காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 60,242 ஆக அதிகரித்துள்ளது. தவிர 147க்கும் அதிகமானர்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top