News

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது – ஐ.நா பொதுச் செயலாளர் கவலை

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு, பாலஸ்தீனியர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் ஆபத்தான ஆக்கிரமிப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.

காசாவை முழுமையாகக் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்மொழிந்த முடிவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு பல முனைகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சீனா, துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் அரசாங்கம் காசா நகரத்தைக் முழுமையாக கைப்பற்றும் முடிவால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். இந்த முடிவு ஆபத்தான ஆக்கிரமிப்பு ஆகும். ஏற்கனவே பேரழிவில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களின் வாழ்வை இது மேலும் ஆபத்தில் ஆழ்த்தும். மீதமுள்ள பணயக்கைதிகள் உட்பட மேலும் பல உயிர்களுக்கு இது ஆபத்தை விளைவிக்கும்.

காசா நகரத்தைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் பொதுமக்கள் மற்றும் பணயக்கைதிகளுக்கு அச்சத்தைத் தூண்டுகிறது. காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து பயங்கரமான பேரழிவை சந்தித்து வருகின்றனர். நிரந்தர போர்நிறுத்தம், காசா முழுவதும் தடையற்ற மனிதாபிமான உதவிகள் மற்றும் அனைத்து பணயக் கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவித்தல் ஆகியவற்றை உடனே செய்யவேண்டும். சர்வதேச சட்டத்துக்கு இஸ்ரேல் கீழ்ப்படிய வேண்டும்.

இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவராமல், இந்த மோதலுக்கு நிலையான தீர்வு கிடைக்காது. காசா பாலஸ்தீன அரசின் ஒருங்கிணைந்த பகுதியாகும், அது அவ்வாறே தொடர்ந்து இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் நாளை (10) அவசரக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top