News

காசா நகர் மீது தொடர்ந்தும் இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: மேலும் 123 பேர் பலி- -பலஸ்தீனர்களை தென் சூடானுக்கு வெளியேற்ற இஸ்ரேல் பேச்சு

 

 

காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்தை முன்வைத்திருக்கும் இஸ்ரேல் காசா நகர் மீது நேற்று சரமாரியாக குண்டு மழை பொழிந்ததோடு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 123 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் ஹமாஸ் அமைப்பினர் எகிப்து மத்தியஸ்தர்களுடன் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளை நெருங்கி இருக்கும் காசா போரில் இஸ்ரேல் தாக்குதல்களை மீண்டும் ஒருமுறை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் கடந்த 24 மணி நேரமும், கடந்த ஒரு வார காலத்தில் அதிக உயிரிழப்புகள் பதிவான தினமாக மாறியுள்ளது.

காசாவில் இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தும் திட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக இருப்பதோடு பலஸ்தீனர்கள் தனது நிலத்தில் இருந்து வெளியேறுவதற்கு வலியுறுத்தியுள்ளார். ‘அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள், அவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்’ என்று ‘ஐ24 நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘பலஸ்தீனர்களுக்காக கவலைப்படும் அனைவரும் பலஸ்தீனர்களுக்கு உதவ விரும்புவதாக கூறுகிறார்கள். அவர்கள் எமக்கு பாடம் நடத்துவதற்கு முன்னர் தமது வாயில்களை திறக்க வேண்டும்’ என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் உள்ள பலஸ்தீனர்களை கிழக்கு ஆபிரிக்க நாடான தென் சூடானுக்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது தொடர்பில் அந்நாட்டுடன் இஸ்ரேலிய பிரதி வெளியுறவு அமைச்சர் ஷரன் ஹஸ்கல் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கும் நிலையிலேயே நெதன்யாகு இந்தப் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியிலேயே, பலஸ்தீனர்களை மீளக் குடியமர்த்தும் திட்டம் ஒன்று குறித்து இஸ்ரேல் மற்றும் தென் சூடான் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்திற்கு அரபு மற்றும் பல உலக தலைவர்களும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அது 1948 போரின்போது ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட ‘நக்பா’ நிகழ்வை ஒத்திருக்கும் என்று அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

போரின் ஆரம்பத்தில் இஸ்ரேல் படை கைப்பற்றி பின்னர் வாபஸ் பெற்ற காசா நகரை மீண்டும் கைப்பற்ற அது திட்டமிட்டுள்ளது. அது ஒரு சில வாரங்களில் நிகழும் என்று இஸ்ரேல் அதிகாரிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டு மோதல் தீவிரம் அடைந்தபோதும் போர் நிறுத்தம் ஒன்றுக்கான வாய்ப்பு தொடர்ந்து இருந்து வருவதாக கூறப்படுகிறது.

காசா நகரின் கிழக்கு பக்கம் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் விமானங்கள் கடுமையாக தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். செய்தூன் மற்றும் ஷெஜைய பகுதியில் கடந்த செவ்வாய் இரவு நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல வீடுகளும் அழிக்கப்பட்டுள்ளன. செய்தூனில் உள்ள வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாக அல் அஹ்லி வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள பல வீடுகளையும் டாங்கிகள் தாக்கி அழித்திருப்பதோடு மத்திய காசாவில் இரு வெவ்வேறு சம்பவங்களில் உதவி பெற திரண்ட பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படை நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மறுபுறம் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் மரணித்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் போர் ஆரம்பித்தது தொடக்கம் காசாவில் பட்டினியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்திருப்பதோடு இவர்களில் 106 பேர் சிறுவர்களாவர்.

ஹமாஸ் தலைமை பேச்சுவார்த்தையாளர் கலீல் அல் ஹய்யா எகிப்து அதிகாரிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். போரை நிறுவத்துவது, உதவி விநியோகம் மற்றும் காசாவில் எமது மக்கள் சந்திக்கும் சோதனைகளை முடிவுக்குக் கொண்டுவருவதை இலக்காகக் கொண்டு இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஹமாஸ் அதிகாரி தாஹிர் அல் நொனோ வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பு காசாவில் ஆட்சியை கைவிட்டு ஆயுதங்களை களைவது உட்பட விரிவான போர் நிறுத்தம் ஒன்றுக்கான சாத்தியம் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டதாக எகிப்து பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவந்து வாபஸ் பெற்றால் அனைத்து யோசனைகள் பற்றியும் ஆலோசிக்க முடியும் என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஆக்கிரமிப்புக்கு முன் ஆயுதங்களை களைவது சாத்தியமற்றது என்று பெயர் குறிப்பிடாத அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

காசாவை கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டம் எதிர்வரும் ஒக்டோபரில் ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் திட்டத்திற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top