காசாவுக்கான நிவாரண பொருட்களை ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய 5 நாடுகள் வழங்கி வருகின்றன.
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக, ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், காசா பகுதியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், காசாவுக்கு முதன்முறையாக கனடா நாடு நிவாரண உதவிகளை வழங்கி உள்ளது. அந்நாட்டின் சி.சி.-130ஜே ஹெர்க்குலிஸ் விமானம், ஜோர்டான் நாட்டின் விமான தளத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. அதில், பருப்புகள், எண்ணெய், பால் பவுடர் மற்றும் பாஸ்டா உள்ளிட்ட உணவு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
இஸ்ரேல் அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பால், உயிர் காக்கும் உணவு மற்றும் மருத்துவ உதவி உள்ளிட்ட நிவாரண பொருட்களை நிலம் வழியே கொண்டு சேர்ப்பது என்பது நாடுகளுக்கு கடும் சவாலாக உள்ளது.
இந்த சூழலில், வான்வழியே 9,800 கிலோ கிராம் எடை கொண்ட நிவாரண பொருட்களை கனடாவின் ஆயுத படைகள் கொண்டு சென்று சேர்த்து உள்ளன. இதுவரை ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய 5 நாடுகள் காசாவுக்கான நிவாரண பொருட்களை கொண்டு சென்று சேர்த்து வருகின்றன.
இந்நிலையில், 6-வது நாடாக கனடாவும் இதில் இணைந்துள்ளது என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது. கடந்த 4 நாட்களாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.