மேற்காசிய நாடான குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியான நிலையில், சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த 67 பேர் கைது செய்யப்பட்டனர்.
முஸ்லிம்கள் நாடான குவைத்தில் மதுபானம் விற்பது, வாங்குவது, வைத்திருப்பது மற்றும் குடிப்பது சட்டப்படி குற்றமாகும். இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, அங்கு கள்ளச்சாராய விற்பனை அதிகளவில் நடக்கிறது.
இந்த நிலையில் குவைத்தில் சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்த, 40 இந்தியர் உட்பட, 160 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். அவர்களில் 23 பேர் உயிரிழந்தனர்; பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இதைத் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனை கும்பலை ஒழிக்க குவைத் அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. ரகசிய சோதனைகள் நடத்தப்பட்டு, கள்ளச்சாராயம் தயாரித்து விற்ற கும்பலைச் சேர்ந்த 67 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், முக்கிய குற்றவாளியான வங்கதேச நாட்டைச் சேர்ந்தவரும் சிக்கியுள்ளார்.