News

ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சரத் வீரசேகர குழு

 

ஜெனீவாவில் செப்டெம்பர் 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் இலங்கை தொடர்பான தனது புதிய அறிக்கையை வெளியிட உள்ளார்.

இந்நிலையில் குறித்த அறிக்கைக்கு எதிர்ப்பினை வெளியிடும் ஆவணத்தில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவின் ஏற்பாட்டில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. உயர்ஸ்தானிகர் வோல்கர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலை, சட்ட நடைமுறைகள் மற்றும் அரசின் ஒத்துழைப்புகள் குறித்த மதிப்பீடு இடம்பெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது இலங்கை இராணுவத்தின் மீது போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கும் செயற்பாடாகும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அந்த வகையிலேயே இதற்கு எதிர்ப்பினை வெளியிடும் நோக்கில் பொது மக்களிடம் கையெழுத்து சேகரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு 8இல் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பௌத்த மதகுமாரர், முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

அத்தோடு திங்கட்கிழமை கொழும்பு – புறக்கோட்டை, கண்டி, குருணாகல், களுத்துறை, சிலாபம், கம்பஹா, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதான நகரங்களில் பொது மக்களின் கையெழுத்து சேகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தை கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஐ.நா. அமர்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை சார்பில் உரையாற்றவுள்ளார்.

அவர் தனது உரையில் நாட்டின் தற்போதைய அரசியல், ஜனநாயக மற்றும் மனித உரிமை நிலைப்பாடுகளை சர்வதேச சமூகத்திற்கு விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை பிரித்தானியா மற்றும் கனடா இணைந்து, இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top