News

தமிழ் இன அழிப்பிற்கான சர்வதேச நீதி கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம்

சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர மத்தியில் ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் முன்பாக இக்கையெழுத்து சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதில் பொதுமக்கள், இளைஞர்கள் குறிப்பாக இன, மத பேதமின்றி தமிழ், முஸ்லிம் இளைஞர்கள், மாணவர்கள் என பல நூறு பேர் தங்களது கையொப்பங்களை ஆர்வத்தோடு இட்டதோடு தமிழின அழிப்பின் வலிகளையும் ஆர்வத்தோடு கேட்டறிந்ததோடு தமது கையொப்பத்தை இட்டிருந்தார்கள்.

நிகழ்வினை ஒருங்கமைத்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் காந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததோடு, பொது மக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடமும் ஊடகங்களிடமும் இக்கையெழுத்துப் போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமது மக்கள் எதிர்நோக்கிய இன்னல்கள், பாதிப்புகள் பற்றியும் அதற்காக தாம் கோரும் சர்வதேச நீதி தொடர்பிலும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

 

இப்போராட்டமானது தாயகச் செயலணியினரின் ஒருங்கமைப்பில் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழர்கள் மீது நடந்த நடந்து கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி எமது மக்களின் கோரிக்கைகளை அறிக்கையாக்கி அவர்களின் கையெழுத்துகளுடன் அனுப்புவதற்கான கையெழுத்துப் போராட்டத்தில் அனைவரும் கட்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பால் இணைந்து உங்கள் கையெழுத்துகளை இட்டு ஐ.நாவை நோக்கிய எமக்கான நீதிப் பயணத்திற்கு வலுச் சேர்க்க அழைக்கிறோம் என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top