News

துருக்கியில் 6.1 ரிச்டர் அளவில் பூகம்பம் ; ஒருவர் உயிரிழப்பு , 29 பேர் காயம், பல கட்டடங்கள் சேதம்

துருக்கியில் 6.1 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.

இஸ்தான்புல் மற்றும் சுற்றுலா தலமான இஸ்மிர் உட்பட துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள பல நகரங்களில் பூகம்பம் உணரப்பட்டுள்ளது.

துருக்கி உள்விவகார அமைச்சர் அலி யெர்லிகாயா,

“இடிபாடுகளுக்குள் சிக்கிய 81 வயது முதியவர் மீட்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால் அவர்களின் உடல்நிலை மோசமாக இல்லை.

இந்த பூகம்பத்தில் சிந்திர்கி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 16 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அவற்றில் நான்கு குடியிருப்புகளும், நகர மையத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடங்களும் அடங்கும்.

ஆறு பேர் வசித்து வந்த மூன்று மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். உயிரிழந்த நபரும் இடிபாடுகளுக்குள் சிக்கினார் என தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு நேரப்படி இரவு 7:53 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவுகோலில் 3.5 முதல் 4.6 வரை சுமார் 20 பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

துருக்கி பல புவியியல் பிளவுக் கோடுகளால் சூழப்பட்டுள்ளமையினால் பல பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தென்மேற்கில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி 53,000 பேர் உயிரிழந்தனர். இந்த பூகம்பம் பண்டைய நகரமான அந்தியோக்கியாவின் தளமான அன்டக்யாவை பேரழிவிற்கு உட்படுத்தியது.

அதேவேளை, ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் 5.8 ரிச்டர் அளவுகோலில் ஏற்பட்ட பூகம்பத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 69 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top