மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்களை கட்டுப்படுத்த நைஜீரிய ஜனாதிபதி போலா தினுபு தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனினும், அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலால், 35 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், நாட்டின் வடகிழக்கே போர்னோ மாகாணத்தில் போகோஹரம் பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு அந்நாட்டின் ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தியது.
கேமரூன் நாட்டுக்கு அருகே கும்ஷே பகுதியில் 4 இடங்களை இலக்காக கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், 35 பேர் உயிரிழந்து உள்ளனர் என நைஜீரிய விமான படையின் செய்தி தொடர்பாளர் எஹிமென் எஜோடேம் கூறினார்.
நைஜீரிய ஜனாதிபதி போலா தினுபு தலைமையிலான அரசு, பயங்கரவாதிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதுடன் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.