பிரான்சின் தெற்கு பகுதியில் பரவி வந்த காட்டுத் தீயானது ஓரளவு தணிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக இதுவரை கிட்டத்தட்ட 11,000 ஹெக்டேர் நிலங்கள் தீக்கிரையாகியுள்ளன, அத்துடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மதியம் தொடங்கிய இந்த காட்டுத் தீ இன்னும் ஆட் மாகணத்தில் உள்ள பல கிராமங்களை பீதியில் வைத்துள்ளது.
காட்டுத் தீயினை அணைக்க கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவருக்கு குறிப்பிடத்தக்க காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் 7 தீயணைப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலைமை தீவிரம் குறித்து ஆட் மாகாண பொதுச்செயலாளர் லூசி ரோய்ச் வழங்கிய தகவலில், இரவு நேர ஈரப்பதம் காரணமாக தீயின் வேகம் குறைந்துள்ளது, இருப்பினும் தீ பரவதற்கான அனைத்து சூழ்நிலைகளும் சுற்றியுள்ள பகுதிகளில் சாதகமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், தீயிணை அணைக்க வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், அதிகாலை முதல் வான்வழி உதவியும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
காட்டுத்தீ காரணமாக பொதுமக்கள் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், மேலும் பல சாலைகள் காட்டுத்தீ காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
காட்டுத்தீ காரணமாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் X தளத்தில் வெளியிட்ட பதிவில், காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து சேவைகளும் முடுக்கி விடப்பட்டு இருப்பதாகவும், பொதுமக்கள் உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.