ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர எங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர்புட்டினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கும் சூழலில் ஸெலென்ஸ்கி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘உக்ரைனின் இறையாண்மையையும், எல்லை மாண்பையும் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ரஷ்யா – -உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக எமது பங்கேற்பு இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவும் உண்மையான அமைதிக்கு எதிரானது மட்டுமில்ல, அது தோல்வியில்தான் முடியும். வெற்று வாக்குறுதிகளைத் தவிர அது வேறு எதையும் கொண்டுவராது.
உக்ரைன் மக்களுக்கு கௌரவமான சமாதானம் வேண்டும். எங்கள் எல்லைகளையும், அரசியல் சாசனத்தையும் மதிக்கும், சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ற அமைதி ஒப்பந்தம்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த இலக்கில் இருந்து எங்களை யாரும் திசைத்திருப்ப முடியாது.
இப்போரை நிறுத்த ரஷ்யாவுடன் எங்கள் நிலப்பகுதிகளை பரிமாறிக்கொள்ளலாம் என்று கூறப்படுவதை நான் நிராகரிக்கிறேன். எங்கள் நிலப் பகுதிகள் பேரம் பேசுவதற்குரியவை அல்ல.
ஆக்கிரமிப்பாளர்களிடம் எங்கள் பகுதிகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அது ரஷ்யர்களின் செயலுக்காக அவர்களுக்கு பரிசளித்தது போல் ஆகும்.
அமைதியை நோக்கி மேற்கொள்ளப்படும் முயற்சிகளை, குறிப்பாக டிரம்ப் தலைமையிலான முயற்சிகளை நான் வரவேற்கிறேன்.
ஆனால், எந்த பேச்சுவார்த்தை, எங்கு நடத்தப்பட்டாலும் அதில் உக்ரைன் பங்கேற்காவிட்டால் அது வெற்றி பெற முடியாது என்றுள்ளார்.