போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெறும் அதேவேளை, உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஒரே இரவில் 600இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷ்யா உக்ரைன் மீது வீசியுள்ளது.
அவற்றில் 577 சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், எஞ்சிய சுட்டு வீழ்த்தப்படாத ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனின் மேற்கு பகுதியை தாக்கியுள்ளன.
போர் தொடங்கிய பிறகு இதுவரை நடத்தப்பட்ட மிகப்-பெரிய தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலில் லிவிவ், முகாசெவோ, டிரான்ஸ்கார்பதியா ஆகிய நகரங்களில் உள்ள பல கட்டிடங்கள், தொழிற்சாலைகள் சேதமடைந்தன. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவ்வாறிருக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்.
பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் போதிலும், ரஷ்யா அமைதியில் உண்மையான அக்கறையை காட்டவில்லை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், போர் தொடர்ந்தும் நீடிப்பதால் உக்ரைன் அதன் நட்பு நாடுகளிடமிருந்து வலுவான வான் பாதுகாப்பு ஆதரவைக் கோருகின்றது.