முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கைது செய்யப்படலாம் என்ற ஊகங்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,
“யாரையும் கைது செய்ய எந்த முயற்சியும் இல்லை. அது எங்கள் நோக்கம் அல்ல. கடந்த காலத்தில் செய்யப்பட்ட குற்றங்களை மட்டுமே அரசாங்கம் விசாரித்து வருகிறது.
குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இணையக் குற்றப் பிரிவுகள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு போன்ற சுயாதீன அமைப்புகளால் விசாரணைகள் பாரபட்சமின்றி -அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் நடத்தப்படுகின்றன.
அந்த நபர் முன்னாள் ஜனாதிபதியா, அமைச்சரா, பிரதி அமைச்சரா, நாடாளுமன்ற உறுப்பினரா அல்லது ஒரு சாதாரண நபரா என்பது ஒரு பொருட்டல்ல.
ஒரு குற்றம் நடந்திருந்தால், அவர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும். அவர்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட நாங்கள் எந்த சார்பையும் கொண்டிருக்கவில்லை.“ என்று தெரிவித்துள்ளார்.