ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் கடந்த சில நாட்களாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் முன்னதாக ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக 600 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த எரிமலை ஒன்று வெடித்து சிதறியது. நிலநடுக்கமே எரிமலை வெடிக்க காரணம் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இந் நிலையில் கம்சட்கா பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
25 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 51.47 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 159.30 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சுனாமி அறிவிப்பு வெளியிடப்பட்டதா என்ற விவரங்களும் வெளியாகவில்லை.