ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், இராணுவ தளங்கள் என்பவற்றின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. இத்தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைன் எல்லையிலிருந்து 1,000 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நோவோகுய்பிஷெவ்ஸ்கில் உள்ள ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரிய வெடிப்பு ஏற்பட்டு தீப்பற்றி எரியும் காணொளி வைரலாகியுள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், விமான நிலையம் மற்றும் இலத்திரனியல் தொழிற்சாலை உட்பட ரஷ்யாவுக்குள் உள்ள பல இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்ததாக உக்ரைன் இராணுவம் கூறியுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் நிலையில் கடந்த சில தினங்களாக ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் படையினர் நடத்தும் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஷ்யா கடும் பொருளாதாரத் தடையை சந்திக்க நேரிடும் என எச்சரித்து, காலக்கெடுவும் விதித்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. பதிலுக்கு உக்ரைனும் ரஷ்யாவுக்குள் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று முன்தினமிரவு உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இராணுவ தளங்களை குறி வைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ரோஸ்டோவ் பகுதியில், ஒரு கைத்தொழில்துறை தளத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்தில் பாதுகாப்பு காவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மொஸ்கோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 180 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ரியாசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இத்தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக உக்ரைனின் 112 ட்ரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.