News

வடகொரியாவில் அணு ஆயுதங்கள் உற்பத்தியை அதிகரிக்க கிம் ஜாங் அன் அதிரடி உத்தரவு

 

கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா அவ்வப்போது பதற்றத்தை தூண்டுகிறது. இதனால் வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றது.

இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகை என கருதும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் இந்த பயிற்சியை கைவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆனால் வடகொரியாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தென்கொரியா மீண்டும் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கி உள்ளது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் சுமார் 21 ஆயிரம் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்தநிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் தலைநகர் பியாங்க்யாங்கில் உள்ள ராணுவ தளத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உருவாக்கப்பட்டு வரும் சோ ஹியோன் என்ற போர்க்கப்பலை அவர் பார்வையிட்டார்.

இதனையடுத்து அவர் கூறுகையில், ” தென்கொரியா-அமெரிக்கா நாடுகள் இடையே நடைபெறும் ராணுவ பயிற்சியானது போரை தூண்டுவதாக அமைந்துள்ளது. எனவே அணு ஆயுத உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டும்” என ராணுவத்துக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆனால் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வடகொரியாவுக்கு ஐ.நா. ஏற்கனவே தடை விதித்துள்ளது. இதனை மீறி அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டு இருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top