ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். எனவே ரஷிய அதிபர் புதினை கடந்த 15-ந்தேதி சந்தித்து இது குறித்து பேசினார்.
அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் டிரம்ப்-புதின் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து முடிவும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியுடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். உக்ரைன் – ரஷியா நாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி,இத்தாலி, பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் ஜெலென்ஸ்கியுடன் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ரஷிய அதிபர் புதினும் போரை நிறுத்துவார் என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசினார்.
புதின், ஜெலென்ஸ்கி ஆகியோருடன் ஒரே இடத்தில் அமைத்தி பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று டிரம்ப் கூறினார். ரஷியாவுடனான போரில் துணை நின்ற ஐரோப்பிய நாடுகளுக்கு நன்றி என்று ஜெலென்ஸ்கி தெரிவித்தார். டிரம்ப்பை ஜெலென்ஸ்கி சந்திக்கும் நிலையிலும் உக்ரைனின் கார்கிவ் நகர் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.