காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 50 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
இதன்படி ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படும் நபர்கள் பதுங்கியிருக்கும் இடங்களில் டிரோன் ஏவுகணைகள் மூலம் வான்வழி தாக்குதல்களை நடத்தி வந்தது. இதற்கிடையே உதவிகளுக்காக காத்துநின்ற பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இன அழிப்பு நடக்கிறதா என்றும் ஐ.நா. விசாரணை மேற்கொண்டது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக காசா மீது தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறி வருகிறார்கள். வாகனங்களிலும், கால்நடையாகவும் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலின் படை துருப்புகள், காசாவுக்குள் தீவிரமாக ஊடுருவி முன்னேறிச் செல்லத் தொடங்கி உள்ளன.
தரைப்படைகள் காசாவில் நுழையும் முன்பு விமானப்படை மற்றும் பீரங்கி பிரிவுகள் காசாவை 150 முறைக்கு மேல் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் காசாவின் பல அடுக்குமாடி குடியிருப்புகள் தகர்க்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி முதல் நடந்து வரும் போரில், காசாவில் பலியானவர்கள் எண்ணக்கை 65 ஆயிரத்தை தாண்டி உள்ளது. போர் மேலும் தீவிரமடைந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.