இந்தியா மற்றும் சீனாவுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவிடம் எண்ணெய் பொருட்களை வாங்கும் முன்னணி நாடுகளாக இந்தியா, சீனா இருந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதனால், இந்தியா, அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் எதிர்ப்பு மீறி ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் பொருட்களை கொள்முதல் செய்து வரும் இந்தியாவிடம், சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளன. இது அதிபர் டிரம்ப்புக்கு எரிச்சலையூட்டியுள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புடினுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, இந்தியா மற்றும் சீனாவுக்கு 100 சதவீத வரியை விதிக்குமாறு, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தூதர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டால், தாங்களும் இதேபோன்ற சுங்கவரிகளை விதிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியதாக ஐரோப்பிய ஒன்றிய தூதர் தெரிவித்தார்.
பொருளாதாரத் தடைகள் குறித்து விவாதிக்க தற்போது ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு வாஷிங்டனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.