News

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா பாரிய தாக்குதல்: அரச கட்டடமும் இலக்கு

 

 

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள பிரதான அரச கட்டடம் உட்பட பல இடங்களில் ரஷ்யா நடத்திய ஆளில்லா மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 15 பேர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை இரவு தொடக்கம் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை வரை ரஷ்யா 805 ஆளில்லா விமானங்கள் மற்றும் 13 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை மேற்கொண்டது தொடக்கம் இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதலாக இது உள்ளது என்று உக்ரைன் விமானப்படை பேச்சாளர் ஒருவரான யூரி இஹ்னட் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் சிசு ஒன்றும் இளம் பெண் ஒருவரும் கொல்லப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டிருக்கும் கீவ் மேயர் விட்டாலி கிலிட்ச்கோ, நகரின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருக்கும் அடுக்குமாடி கட்டடங்கள் தீப்பற்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நகரின் டர்னிஸ்டியி மாவட்டத்தில் உள்ள தற்காலிக முகாம் ஒன்றில் தாக்குதலைத் தொடர்ந்து வயதான பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக உக்ரைனிய செய்தி இணையதளமான ‘கீவ் இன்டிபென்டன்ட்’ குறிப்பிட்டுள்ளது.

‘எதிரியின் தாக்குதலில் அரச கட்டடம் சேதம் அடைந்திருப்பது இது முதல் முறையாகும். கட்டடத்தின் கூரை மற்றும் மேல் மாடி சேதம் அடைந்துள்ளது’ என்று உக்ரைன் பிரதமர் யூலியா சிரிடென்கோ தெரிவித்துள்ளார். ‘நாம் கட்டடங்களை மீளமைப்போம், ஆனால் உயிரிழப்புகளை மீட்க முடியாது’ என்றும் கூறினார்.

மூன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதும் அண்மைய நாட்களாக ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதல்களை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top