News

எலும்பு முறிவுக்கு மூன்றே நிமிடத்தில் தீர்வு: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 

உடைந்த எலும்புகளை சரிசெய்ய, ‘போன் க்ளூ’ எனும் புதிய ‘எலும்பு பசை’யை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, எலும்பு முறிவுகளை மிக விரைவாக அதாவது மூன்று நிமிடங்களுக்குள் குணப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நம் அண்டை நாடான சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லின் சியான்பெங் தலைமையிலான ஆராய்ச்சியாளர்களால், உடைந்த எலும்புகளை சரிசெய்வதற்கான புதிய எலும்பு பசை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ‘போன் – 2’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், உடைந்த எலும்புத் துண்டுகளை இரண்டில் இருந்து மூன்று நிமிடங்களில் ஒட்ட வைக்க முடியும் எனவும், இதனால், சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கான நேரம் கணிசமாக குறையும் எனவும் கூறப்படுகிறது. தற்போது பயன்படுத்தப்படும் உலோக உள் வைப்புகளுக்கு பதிலாக இது ஒரு புரட்சிகரமான மாற்றாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது-.

மேலும், எலும்பு குணமாகும் போது, இந்த பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்பட்டு விடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனால், உலோக தகடுகள் மற்றும் ஆணிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையில், அவற்றை அகற்ற இரண்டாவதாக செய்யப்படும் அறுவை சிகிச்சை தேவையிருக்காது.

ஆய்வக சோதனைகளில், இந்த பசை மிகவும் வலுவானது என்பது தெரியவந்துள்ளது. இந்த பசையை இதுவரை 150க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் சோதிக்கப்பட்டதில், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் இரண்டிலும் நல்ல முடிவுகளை கொடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த போன் – 2 பசை பரவலாக பயன்பாட்டுக்கு வர மேலும் சில சோதனைகள் தேவைப்பட்டாலும், இதன் கண்டுபிடிப்பாளர்கள், சீனா மற்றும் சர்வதேச காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top