News

கரூர் சம்பவம் ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு

தமிழகத்தின் கரூரில் நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், நேற்று இரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

முன்னதாக, காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய பொலிஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நாமக்கல்லில் பிரச்சாரம் செய்துவிட்டு பிற்பகல் 03 மணிக்குப் பிறகுதான் விஜய் புறப்பட்டார்.

இதனிடையே, கரூர் வேலுசாமிபுரத்தில் பகல் 12 மணி முதல் தொண்டர்கள், இரசிகர்கள் கூடினர்.

கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையத்தில் இருந்தே கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரச்சாரப் பேருந்து மிகவும் மெதுவாக நகர்ந்தது. இதனால் இரவு 7.15 மணிக்குதான் பிரச்சார இடத்துக்கு விஜய் வர முடிந்தது.

அங்கு விஜய் பேச ஆரம்பித்தபோது, அவரது மைக் வேலை செய்யவில்லை. அவரது பேச்சைக் கேட்பதற்காக பின்னால் இருப்பவர்கள் நெருங்கியடித்தபடி பிரச்சாரப் பேருந்தை நோக்கி வந்தனர். இதனால் முன்னால் காத்திருந்தவர்கள் நெரிசலில் சிக்குண்டனர்.

விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே மூச்சுத் திணறி பலர் அடுத்தடுத்து மயங்கி விழத் தொடங்கினர். மேலும், அந்த பகுதியில் இருந்த மரக்கிளை உடைந்து விழுந்ததிலும் சிலர் காயமடைந்தனர். விஜய் பிரச்சாரத்தை முடித்து கிளம்பிய பின்னரே அவர்களை மீட்க முடிந்தது.

இதன்போது ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் குழந்தைகள், பெண்கள் உட்பட 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top