காசா நகரில் குடியிருப்பு பகுதிகளை நோக்கி இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி வரும் நிலையில் உதவிக்கான அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அந்த நகரின் மருத்துவ நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 66,000ஐ தாண்டி இருக்கும் நிலையிலேயே இஸ்ரேலிய டாங்கிகள் காசாவின் பிரதான நகருக்குள் ஊடுவியுள்ளன. காசா நகர மையத்திற்கு மிக நெருக்கமாக உள்ள சப்ரா, டெல் அல் ஹவா, ஷெய்க் ரத்வா மற்றும் அல் நாசல் பகுதிகளில் இஸ்ரேலிய டாங்கிகள் ஆழ ஊடுருவி இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் மற்றும் பார்த்தவர்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நகரின் மேற்குப் பகுதிக்கு மிக நெருக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய வாரங்களில் காசா நகரில் உக்கிர தாக்குதல்களை நடத்தி வந்த இஸ்ரேலிய படை அந்த நகரில் தரைவழி தாக்குதலை கடந்த செப்டெம்பர் 16 ஆம் திகதி ஆரம்பித்தது. இந்த உக்கிரத் தாக்குதல்களுக்கு மத்தியில் நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
கடந்த மாதம் தொடக்கம் காசா நகரில் இருந்து 350,000 மற்றும் 400,000 இற்கு இடைப்பட்ட பலஸ்தீனர்கள் வெளியேறி இருப்பதாக உலக உணவுத் திட்டம் கணித்துள்ளது. அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்து தங்கி இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. காசாவின் 2.2 மில்லியன் மக்கள் தொகையில் பாதி அளவானர்கள் காசா நகரில் வசிப்பதாக முன்னதாக கணிக்கப்பட்டிருந்தது.
காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமில் உள்ள இரு வீடுகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட எட்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
நேற்றுக் காலை இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் அபூ அமர் குடும்ப வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் ஆறு பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 77 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தவிர 379 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்த அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசா போருக்கு இரண்டு ஆண்டு நெருங்கி இருக்கும் நிலையில் அங்கு கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 66 ஆயிரத்தைத் தாண்டி 66,005 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 168,162 பேர் காயமடைந்துள்ளனர்.
போர் நிறுத்த முயற்சிகளும் ஸ்தம்பித்திரும் நிலையில் டோஹாமி இஸ்ரேல் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அந்த எதிர்பார்ப்பு மேலும் வலுவிழந்துள்ளது. ஆனால் காசாவில் உடன்படிக்கை ஒன்றை எட்ட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார். எவ்வாறானும் புதிய முன்மொழிவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்று ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
டிரம்ப் வெள்ளை மாளிகையில் இன்று (29) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்கவுள்ள நிலையிலேயே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் மைக் ஹகபி, எகிப்து சென்று அந்நாட்டு அதிகாரிகளை சந்திக்கவிருப்பதாக அந்தத் தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மத்தியஸ்த முயற்சியில் எகிப்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நெதன்யாகு அரசு மீது சர்வதேச அழுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகாரித்து வருகின்றன. இஸ்ரேலின் எதிர்ப்புக்கு மத்தியிலும் முக்கிய மேற்குலக கூட்டணிகளின் பல நாடுகளும் பலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல் மீது தடை விதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருவதோடு அந்தத் தடை விளையாட்டு மற்றும் கலாசார துறைகளுக்கு பரவும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
கடந்;த வெள்ளிக்கிழமை பொதுச் சபையில் நெதன்யாகு உரையாற்ற வந்தபோது அதிகப் பெரும்பான்மையான பிரதிநிதிகள் பொதுச் சபையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். ஹமாஸுக்கு எதிரான பணியை முடிக்க வேண்டி இருப்பதாகவும் காசா நகர் மீதான தாக்குதலை தமது இராணுவம் தொடர்ந்து நடத்துவதாகவும் அவர் அந்த உரையில் குறிப்பிட்டிருந்தார்.
காசாவில் தொடர்ந்து 48 பயணயக்கைதிகள் ஹமாஸ் பிடியில்இருப்பதோடு இவர்களில் சுமார் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.