சீனாவில் மூளைச்சாவு அடைந்த நபருக்கு பன்றியின் நுரையீரலை வெற்றிகரமாக பொருத்தி அதன் இயக்கத்தை அந்நாட்டு மருத்துவர் குழு ஆய்வு செய்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் குவாங்ஜோவில் உள்ள மருத்துவப் பல்கலை மருத்துவமனையில் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. நுரையீரல் மருத்துவ நிபுணர் ஜியான்ஷிங் ஹே தலைமையில் இந்த சோதனை முறையிலான அறுவை சிகிச்சை நடந்தது. இதற்காக சீனாவின் பாமா சியாங் பன்றியின் நுரையீரல் பயன்படுத்தப்பட்டது. இது அளவில் மனித நுரையீரல் அளவைக் கொண்டிருந்தது. மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஏற்றவாறு பன்றியின் நுரையீரலில் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டன.
ஆரம்பத்தில் பிராண வாயுக்களை பரிமாற்றி ரத்த ஆக்சிஜன் அளவை உடலில் சகஜமாக வைத்திருந்தது. 24 மணி நேரத்துக்கு பின் நுரையீரலில் திரவம் சேர துவங்கியது. மூன்று முதல் ஆறு நாட்களில் நோய் எதிர்ப்பு திசு சேதமடைந்தது. ஒன்பது நாளுடன் சோதனை நிறுத்தப்பட்டது.
கிடைத்த தகவல்களை வைத்து மேலும் இது தொடர்பான ஆராய்ச்சிகளை சீன மருத்துவர்கள் மேற்கொள்ள உள்ளனர். அமெரிக்காவில், டிம் ஆண்ட்ரூஸ், 67, என்ற நபருக்கு கடந்த மார்ச்சில் மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்டது. அவர் ஆறு மாதங்களுக்கு மேல் உயிருடன் இருந்தார்.