News

நல்லூரில் தியாக தீபத்திற்கு காவடி – யாழில் திரண்டு அஞ்சலி செலுத்திய மக்கள்

நெடுந்தீவில் தமிழரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகாளார் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதனை தொடர்ந்து நெடுந்தீவு தாளைத்துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவு கலங்கரை விளக்கத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு நெடுந்தீவு பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகாளாரால் மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், நினைவுச் சுடரனினை நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் ச.சத்தியவரதன் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டு பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தியிருந்ததுடன் இதன்போது தமிழரசுக்கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பனர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம், இன்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு மாவீரரரின் தாயொருவர் பொதுச் சுடர் ஏற்றினார்.

அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் தூக்கு காவடி ஒன்று நினைவிடத்திற்கு வந்ததுடன், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்தி பவனிகள்  வந்திருந்தன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.

மற்றும் தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி சாவைத் தழுவிக் கொண்டார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top