இமயமலை அடிவார நாடான நேபாளத்தை ஆண்டுவரும் கே.பி.சர்மா ஒலி அரசு, நாட்டில் சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. அதாவது நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் அனைத்து சமூக வலைதளங்களும் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதற்காக 7 நாட்கள் கெடு விதித்து கடந்த மாதம் 28-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
அரசின் இந்த உத்தரவை ஏற்று பல சமூக ஊடகங்கள் பதிவுக்கு நடவடிக்கை எடுத்து உள்ளன. ஆனால் 26 சமூக ஊடக தளங்கள் இந்த பதிவை செய்யவில்லை.எனவே அந்த சமூக வலைதளங்களை கடந்த 4-ந் தேதி நள்ளிரவு முதல் நேபாள அரசு தடை செய்தது. நேபாள அரசு சமூக வலைதளங்களுக்கு எதிரானது அல்ல எனக்கூறிய பிரதமர் கே.பி.ஒலி, அதேநேரம் நேபாள அரசின் சட்டத்துக்கு உட்படாமல் சமூக ஊடகங்கள் நாட்டில் வணிகம் செய்வதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்து இருந்தார்.
அதன்படி பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்கள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டன. இது வலைத்தளவாசிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவே இந்த நடவடிக்கை என அரசு விளக்கம் அளித்தாலும், தங்கள் கருத்துரிமையை பறிக்கவும், தணிக்கை நடவடிக்கையிலும் அரசு ஈடுபடுவதாக இளைஞர்கள் மத்தியில் அச்சம் பரவியது. மேலும் தங்கள் வியாபாரத்துக்காக சமூக வலைதளங்களை சார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கானோர் அரசின் இந்த தடையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதைப்போல வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் படிக்க சென்றுள்ள மாணவர்கள் மற்றும் வேலைக்கு சென்றிருப்போரும் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே நேபாள அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க இளைஞர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைய தலைமுறையினர் திட்டமிட்டனர். இதற்காக தடையில் சிக்காத டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும், மேலும் பல்வேறு வழிகள் வாயிலாகவும் ஏராளமானோரை திரட்டினர்.
பின்னர் பல்வேறு இடங்களில் இருந்து நேற்று தலைநகர் காட்மாண்டை நோக்கி பேரணியாக சென்றனர். அங்கே நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு முன்பு திரளாக குவிந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய தலைமுறையை குறிக்கும் ‘ஜென் சி’ என்ற பெயரிலான பதாகையை ஏந்திக்கொண்டு ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
சமூக வலைதள தடையை நீக்க வலியுறுத்திய அவர்கள், ஆளும் தலைவர்களின் ஊழலையும் எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். நாட்டில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தி தீவிரமாக போராடினர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் செல்ல முயன்றனர். அங்கே வைக்கப்பட்டிருந்த தடைகளை அகற்றிக்கொண்டு உள்ளே செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே பலத்த தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அத்துடன் பெரும் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் பல்வேறு வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு தீ வைத்தனர்.பல இடங்களில் போலீசாரும், போராட்டக்காரர்களும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும், ரப்பர் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை அடக்க முயன்றனர்.
ஆனால் நிலைமை கைமீறி போகவே வன்முறையாளர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் பாதுகாப்பு படையினர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள சிவில் ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
எனினும் உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நேபாள அரசு இதுவரை வெளியிடவில்லை. போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தலைநகரில் ராணுவமும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி மாளிகை, துணை ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம், போராட்டம், கூட்டங்களுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
அதேநேரம் தலைநகரில் தொடங்கிய போராட்டம், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி உள்ளது. பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நேபாள அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அந்த வகையில் நேற்று முன்தினம் தலைநகரில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கண்டன பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடக தடைக்கு எதிரான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் இந்த போராட்டம் மற்றும் வன்முறையால் நேபாள தலைநகர் காட்மாண்டு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே, நேபாள அமைச்சரவைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்படுவதாக நேபாள அரசு அறிவித்தது.
இதனிடையே போராட்டம் கையை மீறி சென்ற நிலையில், நேபாள உள்துறை மந்திரி ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு பிறகும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேபாள தலைநகர் காத்மண்டுவில் பதற்றம் தொடர்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான சூழல் தொடர்வதால் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. போராட்டக்காரர்களை நேபாள அரசு கையாண்ட விதம் அதிருப்தி அளிப்பதாக ஐ.நா. சபை கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேபாள வேளாண்துறை மந்திரி ராம்நாத் அதிகாரி தற்போது பதவி விலகி உள்ளார். காத்மாண்டுவை உலுக்கி வரும் இளைஞர்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் இரண்டு முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்ததை அடுத்து, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி மிகப்பெரும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார். இந்த சூழலில் அவர் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் ஒலி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் கடினமான சூழலில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.