நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஓகஸ்ட் 28 ஆம் திகதி அரசு உத்தரவிட்டிருந்தது.
நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஓகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), எல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை.
எனவே பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. அதனை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் பரவுவதை தடுக்க, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாகக் கூறி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் காத்மண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள் நேபாள நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலை சூறையாடியதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
நேபாள அரசு போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்துள்ளது.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரழந்தோரின் எண்ணிக்கை 19 பேர் ஆக உயர்ந்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டம் கலவரமாக மாறியதில் 19 இளைஞர்கள் பலி எதிரொலியாக நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லோகாக் பதவி விலகியுள்ளார்.