காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. அதேவேளை, ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பணயக் கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களால் காசா முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. இதுவரை சுமார் 65 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பல்வேறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே, போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு சர்வதேச நாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிவாரண உதவிகளை இஸ்ரேல் ராணுவம் தடுத்து நிறுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் காசாவில் மோசமான பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், சுவீடன் நாட்டை சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க், கடல்வழியாக நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பலில் காசா நோக்கி பயணம் மேற்கொண்டார். அவருடன் அமெரிக்க நடிகை சூசன் சாரண்டன் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சுமார் 40 படகுகளில் சென்றனர்.
அவர்களது படகுகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடல் எல்லைக்குள் நுழைந்தபோது, இஸ்ரேல் கடற்படையினர் அங்கு விரைந்து சென்று கிரேட்டா தன்பெர்க் மற்றும் அவரது குழுவினரை தடுத்து நிறுத்தினர். அவர்கள் கொண்டு வந்த நிவாரண பொருட்களை பறிமுதல் செய்த இஸ்ரேல் கடற்படையினர், கிரேட்டா தன்பெர்க் மற்றும் குழுவினரை இஸ்ரேலில் உள்ள அஷோத் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விரைவில் அனைவரும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.