கனடாவில், இந்திய இளம்பெண் ஒருவரைக் கொலை செய்ததாக தேடப்படும் சக இந்தியர் ஒருவர் நாட்டை விட்டு தப்பியோடியிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில், கனடாவின் ரொரன்றோவிலுள்ள நார்த் யார்க்கில் வசித்துவந்த அமன்பிரீத் சைனி (27) என்னும் இந்திய இளம்பெண்ணின் உயிரற்ற உடல், Charles Daley Park என்னும் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டது.
உடல் முழுவதும் பயங்கர காயங்களுடன் சைனியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பிராம்டனைச் சேர்ந்த இந்திய இளைஞர் மன்பிரீத் சிங் (27) சைனியைக் கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
மன்பிரீத் சிங் மீது கனடா முழுமைக்குமான கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மன்பிரீத் சிங் கனடாவிலிருந்து தப்பியோடியிருக்கலாம் என தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
மன்பிரீத்தைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிசார், அவர் குறித்து ஏதாவது தகவல் தெரியவந்தால் தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
