காசாவில் தொடரும் பலவீனமான போர் நிறுத்தத்திற்கு மத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் நேற்றும் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் காசா மருத்துவமனைகளுக்கு 29 சடலங்கள் வந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் காசாவில் போர் நிறுத்தம் எட்டப்பட்டு ஹமாஸ் பிடியில் இருந்த உயிருடன் உள்ள அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு பகரமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேலிய சிறைகளில் இருந்தும் இஸ்ரேலால் தடுத்துவைக்கப்பட்டவர்கள் என சுமார் 2000 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.
எனினும் காசாவில் இஸ்ரேல் தொடர்பில் போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டு வருவதான குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் காசா மருத்துவமனைகளுக்கு வந்த 29 சடலங்களில் 22 சடலங்கள் முந்தைய தாக்குதல்களில் கொல்லப்பட்ட நிலையில் இடிபாடுகள் மற்றும் வீதியோரங்களில் இருந்து மீட்கப்பட்டவையாகும். எனினும் நால்வர் இஸ்ரேலியப் படையின் புதிய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களாவர்.
போர் நிறுத்த உடன்படிக்கையின்படி இஸ்ரேலியப் படை காசாவில் பிரதான நகரங்களில் இருந்து வாபஸ் பெற்று இணங்கிய மஞ்சள் கோட்டு எல்லைக்குச் சென்றது. எனினும் எல்லையை மீறி வருபவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இந்நிலையில் தெற்கு காசாவில் கான் யூனிஸில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் பலஸ்தீன சகோதரர்கள் இருவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
அல் அக்பர் பகுதியில் இவர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் அவர்களின் உடல்களை மீட்பதற்கு அம்புலன்ஸ் வண்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக செய்தி குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் காசாவில் போர் நிறுத்தம் எட்டப்பட்ட பின்னரும் கூட இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் போர் நிறுத்தம் எட்டப்பட்ட சூழலிலும் கடந்த இரண்டு ஆண்டுகள் நீடித்த போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 68 ஆயிரத்தை நெருங்கி 67,967 ஆக உயர்ந்துள்ளது. தவிர, 170,179 பேர் காயமடைந்துள்ளனர்.
காசாவில் நிலைகொண்டிருக்கும் இஸ்ரேலிய துருப்புகள் அங்கு 53 வீதமான நிலப் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்தத்தை அடுத்து காசாவுக்கான உதவிகள் சென்றபோதும் இஸ்ரேல் அதில் கட்டுப்பாடுகளை விதித்து வருதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. காசாவுக்கு உதவிகள் செல்வதில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம், நூற்றுக்கணக்கான உதவி வாகனங்கள் தேவையுள்ள பலஸ்தீனர்களை இன்னும் அடையவில்லை என்று தெரிவித்துள்ளது.