காசாவில் மேலும் இரு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் கையளித்திருக்கும் ஹமாஸ் அமைப்பு காசா போர் நிறுத்த உடன்படிக்கையின் விதிகளை கடைப்பிடிப்பதற்கு இஸ்ரேல் தவறி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. எகிப்துடனான காசாவின் ரபா எல்லைக் கடவையை இஸ்ரேல் இன்னும் திறக்காத நிலையிலேயே ஹமாஸ் இந்த குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.
ஒரு படை வீரர் மற்றும் ஒரு சிவிலியன் என இரு பணயக்கைதிகளின் உடல்களையே ஹமாஸ் கடந்த செவ்வாய்க்கிழமை (21) இரவு கையளித்தது. இந்த உடல்கள் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் இதில் ஒருவர் 85 வயது அரியேஹ் சல்மனோவிச் என்றும் மற்றவர் இஸ்ரேல் இராணுவத்தின் 38 வயது டமிர் அதர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் இருந்து ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படையணி இந்த உடல்களை சர்வதேச வெஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்துள்ளது.
சல்மனோவிச் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டிருந்த நிலையில் 2023 நவம்பர் 17 ஆம் திகதி காசாவில் கொல்லப்பட்டதாகவும் அதர் 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெற்ற பலஸ்தீன போராளிகளுடனான மோதலின்போது கொல்லப்பட்டவர் என்றும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி ஹமாஸ் அமைப்பு இதுவரை 15 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை கையளித்துள்ளது. இன்னும் 13 உடல்கள் காசாவில் இருப்பதாக நம்பப்படுகிறது. காசா பகுதியில் ஏற்பட்டிருக்கும் பெரும் சேதங்கள் மற்றும் அந்தப் பகுதியின் குறிப்பிட்ட இடங்கள் தொடர்ந்தும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் இந்த உடல்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் போர் நிறுத்தம் ஆரம்பித்த மறு தினத்திலேயே ஹமாஸ் அமைப்பு தனது பிடியில் உயிருடன் இருந்த 20 பணயக்கைதிகளையும் விடுவித்தது.
முன்னதாக இஸ்ரேலின் தடுப்புக்காவலில் கொல்லப்பட்ட 15 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் கையளித்திருந்தது. இந்த உடல்கள் அடையாளம் காணப்படுவதாற்காக நாசர் மருத்துவ வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போர் நிறுத்த உடன்படிக்கையின்படி, இஸ்ரேல் சுமார் 2000 உயிரிருடன் உள்ள பலஸ்தீன கைதிகளை இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவித்தது. உயிரிழந்த 360 பலஸ்தீனர்களின் உடல்களை விடுவிப்பதற்கு இஸ்ரேல் உடன்பட்டது. இவ்வாறு கடந்த வாரம் 45 பலஸ்தீனர்களின் உடல்கள் தடவியல் குழுவுக்கு கிடைத்தது. இதில் சில உடல்கள் கையளிக்கப்படும்போதும் விலங்கிடப்பட்டிருந்ததோடு துன்புறுத்தப்பட்டது மற்றும் கொல்லப்பட்டதற்கான அடையாளங்களும் உடலில் இருந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஹமாஸ் அதிகாரிகள் குழு ஒன்று கடந்த செவ்வாயன்று கட்டாரில் துருக்கி அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இஸ்ரேல் தொடர்ந்து போர் நிறுத்தத்தை மீறிய நிலையிலும் அதனை கடைப்பிடிப்பதில் அந்த பிரதிநிதிகள் உறுதி அளித்துள்ளனர.;
எகிப்துடனான ரபா எல்லையை திறக்காது இஸ்ரேல் போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க தவறி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த எல்லை காயமடைந்தவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் காசாவில் இருந்து வெளியேறுவதற்கு உதவுவதோடு காசாவுக்கு உதவிகள் செல்வதையும் இஸ்ரேல் தடுத்து வருவதாக ஹமாஸ் அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
‘எமது மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திர நாட்டுக்;கான அவர்களின் உரிமை’ தொடர்பிலும் ஹமாஸ் தூதுக்குழுவின் தலைவர் முஜாஹித் முஹம்மது சுட்டிக்காட்டியுள்ளார்.
எகிப்தின் சுற்றுலா நகராக ஷார்ம் அல் ஷெய்க்கில் இந்த மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற காசா போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பான ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் கைச்சாத்திட்ட தரப்பில் துருக்கியும் உள்ளது.
காசாவின் தெற்கு நகரான ரபாவை இஸ்ரேலியப் படை ஆக்கிரமித்த பின்னர் 2024 மே 7 ஆம் திகதி தொடக்கம் ரபா எல்லைக்கடவை மூடப்பட்ட நிலையில் உள்ளது. காசாவுக்கான மனிதாபிமான உதவிகள் செல்வதற்கான பிரதான இரு இரத்த நாளங்களில் ஒன்றாக இந்த ரபா எல்லைக் கடவையை ஐக்கிய நாடுகள் நிறுவனம் வர்ணித்திருந்தது.
இந்த எல்லைக்கடவையை திறக்கும்படி ஐக்கிய நாடுகளின் நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் கடந்த 2024 மே 24 அன்று உத்தரவிட்டபோதும் அது தொடர்ந்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. அருகில் இருக்கும் கரம் அபூ சலம் எல்லை மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட வகையில் திறக்கப்பட்டுள்ளது.