News

மெக்சிகோவில் புயலுக்கு 1 லட்சம் வீடுகள் பாதிப்பு; 130 பேர் பலி

 

 

மெக்சிகோ நாட்டில் ஆண்டுதோறும் பசிபிக் பெருங்கடலில் தோன்றும் புயலால் பெரும் பாதிப்புகள் ஏற்படும். இந்த நிலையில், நடப்பு ஆண்டில் பிரிசில்லா மற்றும் ரேமண்ட் என 2 புயல்கள் தாக்கின. இதனால், ஹிடால்கோ, புபேல்லா உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இரு புயல்களால், கனமழை, வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் மின்கம்பங்கள், மரங்கள் ஆகியவை முறிந்தன.

இதனால் மின்வினியோகம் தடைப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்நிலையில், ஹிடால்கோ மாகாணத்தில் கனமழைக்கு 66 பேர் வரை பலியாகி இருந்தனர். இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஒரேநாளில் 64 பேர் பலியாகி உள்ளனர். 60 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.

இதுபற்றி ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த அளவுக்கு தீவிர மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை. 1 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன என்றார். நிதி அமைச்சக அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ள அவர், மறுகட்டமைப்பு முயற்சிக்கான பணிகள் பற்றியும் ஆலோசிக்கிறார்.

இதேபோன்று வெராகுரூஸ் மாகாணமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 29 பேர் பலியானார்கள். 18 பேரை காணவில்லை என தகவல் தெரிவிக்கின்றது. 5 மாகாணங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களின் பரவலும் அதிகரித்து காணப்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top