News

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

 

 

போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா சம்மதிக்காததால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் இரு பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடையை அமல்படுத்தினார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த 2022 பிப்ரவரியில் முழு அளவிலான போரை துவக்கியது. மூன்றரை ஆண்டுகளைக் கடந்தும் தொடரும் இந்த போர் உலக அளவில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பாவை தொடர்ந்து பதற்றத்தில் ஆழ்த்தி உள்ள இந்த போரில், உக்ரைனை ஆதரிக்கும் அமெரிக்கா அதற்காக பல லட்சம் கோடி ரூபாயை இதுவரை செலவிட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தவியாய் தவித்து வருகிறார். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அமெரிக்காவின் அலாஸ்காவில் வைத்து நேரில் சந்தித்து பேச்சு நடத்தினார். அதன் பின்னும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

உக்ரைன் மீதான தாக்குதலை இன்னமும் ரஷ்யா தொடர்ந்து வருகிறது. நேற்று, உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்ய ஏவுகணைகள் விழுந்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும், புடின் மேற்பார்வையில் அணு ஆயுத போர் ஒத்திகையிலும் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது.

இதுவரை ரஷ்யாவின் எரிசக்தி துறையை குறிவைத்து அதிபர் டிரம்ப் எந்த ஒரு பொருளாதாரத் தடையையும் விதிக்காமல் இருந்தார். பேச்சு நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என நம்பினார். ஐரோப்பிய நாடான ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் டிரம்ப் – புடின் இடையே மீண்டும் ஒரு நேரடி சந்திப்பு நடக்க இருந்தது. அதை டிரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

இந்நிலையில், ரஷ்யாவின் இரு பெரும் கச்சா எண்ணெய் நிறுவனங்களான ‘ரோஸ்னெப்ட்’ மற்றும் ‘லுாகாயில்’ மீது பொருளாதார தடையை அமல்படுத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளா ர்.

உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் இந்த இரு நிறுவனங்களும், 6 சதவீத பங்கை கொண்டு உள்ளன.மேலும், ரஷ்ய அரசுக்கான மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இந்நிறுவனங்கள் உள்ளன.

இது குறித்து அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை:

தற்போது மனித உயிர் பலிகளை தடுத்து உடனடியாக போர்நிறுத்தம் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமி ர் புடின் இந்த அர்த்தமற்ற போரை முடிக்க மறுக்கிறார். ரஷ்யாவின் போர் இயந்திரத்துக்கு நிதி வழங்கும் அந்நாட்டின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்க நிதியமைச்ச கம் தடை விதிக்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாக நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த உள்ளதாக இந்தியா சார்பில் என்னிடம் தெரிவித்தனர். இந்த ஆண்டு இறுதிக்குள் அதை முற்றிலுமாக நிறுத்திவிடுவர். சீனாவும் இதை செய்யும் என்று நம்புகிறேன்,” என, குறிப்பிட்டார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top